Sunday, February 18, 2007

தேசம்

பார்.
தென்றல் வீசிய தேசமொன்றில்
இன்று சூனியம் சும்மா கொட்டிக் கிடக்கிறது!
வேதம் ஓதிய தெருக்களில்
ஒப்பாரி ஓலங்கள் கேட்கிறது..
பாடை கட்டல்
தினசரி காலைக் கடனாகியது...
இன்று
சாவு தாண்டி வீடு வந்தால்
கின்னஸ் சாதனை தானது!

இதோ
என் தேசத்தின் ஒரு பிடி மண்
நுகர்ந்து பார்!
இரசாயனக் கலவை கலந்துழுத
மண்ணில்
இரத்த வாசனை தெரிகிறதா?

அதோ.... அங்கே...
சின்னச் சிசு நிலத்திலறைந்து
பெரிய பெரிய சங்கிலி வாகனம்;
அப்பால்
ஆகாயத்திலிருந்தும் துப்பாக்கி மழை;
நெற்றிக்கு முன் பச்சைத் தொப்பி
குறிவைத்துச் சுட்ட உடல்கள்
உயிர் துப்பி..;
இரத்த ஆற்றில்
இன வெறியின் வேளாண்மை.!

அறுத்தெடுத்த பெண்ணின் முலையில்
பிதுங்கும் இரத்தம்;
கற்பு கனரக ஆயுதத்திற்கு முன்
அற்ப்பமாய்...சும்மா..;
வியாகூலங்களின் விறைப்பில்
எங்கள் உயிர்க் கோட்டில்
குறி வைக்க கோடிச் செலவில்
ஆயுதங்கள்;

சிறையெடுத்து வெறியினமொன்று
எங்கள் சீதைகளைச் சீரழிக்கிறது..!
சீதை கூட
ஒரு தடவை தான்
தீக் குளித்தாள்...
ஆனால்
எங்கள் தேச மாதாவோ
தினசரி தீக்கிரையாகிறாள்!

மேற்படி காலங்களில்
எங்களூரின் மயானங்களில் கூட
பூந்தோட்டங்கள் வைத்திருந்தோம்..
இன்று
எங்கள் பூங்காவனங்கள்
மயானங்களாய்.... சாம்பராகி.....


கீறிய தேசப் பரப்பின் எல்லைக் கோடு
தெளிவாக்கப் படவென்று
பூகம்பங்களோடு.... எரிமலைகளுமாய்
உயிர்கள். குடித்து
துயரமளிக்கும் தேசம்...!

உன்னதமான கலாச்சாரமொன்றைக்
காவு வாங்கிய
சாத்திய கூறுகள் கொண்டு
எங்கள் தேசமிங்கு
நிர்வாணப்படுத்தலில் நிர்மூலமாகியதற்கு
அரை நூற்றாண்டுக் கதையிருக்கிறது...!

கட்டடங்கள் தரை மட்டமாக்கி
இந்த மண்ணில்
சில செத்த வீடுகள் நடத்தி
தேசம் அழித்து விட்டதாய்
ஒரு சாராரின் பகல் கனவொன்று
நடை முரையில் இருப்பதாய்
கேள்வி!

ஆனால்....இங்கு
எத்தனை முறை வேண்டுமெனிலும்
இத் தேசத்தின் சுயம்
கட்டியெழுப்பவென்று
திருப்பணிகள் அமுலில் வைத்த
சமுதாயமொன்று நடத்துகிறது
விழிப்புணர்வில்
ஒரு வேள்வி...!




1 comment:

தெ. ஆறுமுகம் said...

when i read this, some what happing in my soul.. really good...