Saturday, December 29, 2007

விடிவெள்ளிக்கு ஒரு வாழ்த்து!

விடியலை பார்த்திருந்தோம்...
விடி வெள்ளியாக வேங்கை வந்தான்!
கொடியவர் கையில் குலையுண்டோம்..
தமிழீழக் கொடியுடன்
தானைத் தலைவன் வந்தான்!

செந்நீருடன் கண்ணீரும் சிவப்பாய்
உப்பளங்களாய் உள்ளங்களும் வெடித்து
சிதறிய தசை முண்டங்களாய்
தமிழினம் தெருவில் சிதைய
பந்தாடிய கொடியவர் தலைகளை
கொத்தாக கொய்து போட
எங்கள் குல வீரன் வந்தான்!

மறவன் இனம் மாறாது குணம்
தீயும் காற்றும் சேர்ந்த வீரம்
சீறும் புலியின் பாயும் வேகம்
சிங்களமே நடுங்கும் தீரம்..
பேரம் பேசி முடக்க நினைத்தார்
ஒரு பேடியா இவன் அடங்கிப் போக..?
கோரம் காட்டி குதற முனந்தார்
ஒரு கோழையோ ஒதுங்கிப் போக?
நீசம் செய்த இனம் நடுங்க
நேசன் நிமிர்ந்து வந்தான்
விஸ்வரூம பொங்க...
பேசப் பேச இனியது தமிழ்..
இவனால்
இன்று உலகையே பேச வைத்தது
தமிழ்!

கூனிக் குறுகி இரோம் -இனி
இவன் கையில் கொடுத்தோம் எமை
கூடியொரு நாள் நாமும்
கும்மி கொட்டுவோம் எம் மண்ணில்
வீரன் பெற்ற விடுதலையை
குரவை கூட்டி பண்ணிசையில்..

அந்த நாளும் வாராதோ?
அக்கணம் வரை என்னுயிர் தரியாதோ?
சிந்திய என் சோதரர் குருதியின் ஈடாய்
எம் தேசத்தின் தலைவன் தரும் ஈழம்
இன்பமாய் ஒரு கணம் நுகர
அந்த நாளும் வாரதோ?
அக் கணம் வரை என்னுயிர் தரியாதோ?


*************************

எம் தாய்மண்ணின் மானம் காக்க களம் நடத்தும்
நம் தானைத் தலைவனுக்கு
என் மனம் குவிந்த , மனம் குளிர்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை
சமர்ப்பிக்கும் முகமாக 26.11.2007ல் எழுதப்பட்டது.

தேசக் குரலுக்கு ஓர் அஞ்சலி!

கோடி களில் தவழ்ந்திருக்கலாம் -
கோட்டு சூட்டோடு வாழ்ந்திருக்கலாம்.
சோடித்த கதை சொல்லி
செவ்வனவே...ஒரு தேசத்தில்
புகலிடமும் பிடித்திருக்கலாம்.
செய்தாயா நீ?

நூல்கள் எழுதின விரல்கள்
நூதனமாய் விளைந்த சிந்தனை துளிகள்.
ஆயுதங்கள் புழங்கிய கைகளுடன்
மிதவாதங்கள் புகுத்தப்பட்ட அறிவு புலனுடன்
சோதரனை நிமிர்த்திவிட்டாய்...!
புது வழியினை செப்பனிட்டாய்!
கடைசிவரை இருந்தாயா நீ?

நோயுடன் போராடினாய்.
ஒவ்வொரு தமிழனின் முதுகெலும்பிலும்
சுதந்திர கணத்தாக்கம்
தருவிக்கவும் போராடினாய்.
தடைகள் போட்ட எதிரியுடனும் போராட்டம்.
தமிழன் தகுதி உணர்த்த தரணி முழுவதுடனும் போராட்டம்..
தனித்து ஒரு நிமிடமேனும்
ஆசுவாசம் கண்டாயா நீ?

காதலுக்கு கட்டுண்ட கல்யாணமா?
கொள்கைகளால் கட்டப்பட்ட கல்யாணமா?
பாதிக்குப் பாதி உன் பாவையுமல்லவா
கை கோர்ர்த்தாள்..கதை எழுதினாள்....
பல்லக்கில் நீ புறப்பட்ட உலாவின் பின்
உன் பாரியாளின் தனிமைக்கேனும்
கொல்ல வந்த காலனிடம் கோவித்தாயா நீ?

மெல்லக் கண்மூடியதும் ஏன்?
மேதினியில் ஈழம் பார்க்க
மேல் உலகம் தான் வசதியோ?
சொல்லாமல் செல்கின்றாரே சோதரர்,
சேர்வையில் ஒன்றாக சேர்ந்தையோ?
பொல்லாத கோபம் அண்ணா உன்னுடன்
வெல்லாத இந்த நீசர்களுக்கு பதிலளிக்க
வேளைகளில் நீயில்லையென.!.
கல்லாகிப் போன காலனுக்கும் அறிவில்லை
கடைசி வரை இருந்தாயா நீ?

தேசத்தின் குரல் தேங்கி விட்டது.
எங்கள் குரல் நாண்களில் கேவல்கள் மட்டும் மிச்சமாய்..
ஆசுவாசம் கேட்கிறோம்;
ஆர்பரிக்கும் மன உளைச்சலிடம்..
நேசமான உன் முகம் மனதில்
நினைவுகளும் பொதி சுமைகள்
வீசிடும் தமிழ் காற்றில் விறைப்பாய் தெரிவதென்ன?
உன் மூச்சா?

திரிகள் அகல்களுக்குள் கட்டுண்டு...
ஜோதி மட்டும் வெளியில் பரவும்.
பூவுடல் மண்ணுக்குள் மட்டும்
பாலா அண்ணன் ஆத்துமா ஈழத்தின் வாய்மண்டல்த்துள்...
வானம் பார்த்த பூமியில் வாடிய பயிர்கள் நாம்
மாரி கொட்டும் எம் விழிகள்
மறைந்துவிட்ட சூரியனுக்காய்..
பாடல்கள் படையல் வைத்தோம்
தேசத்தின் குரலுக்காக...
கேட்கிறாதா சொர்க்கத்தில்....?


அண்ணாவுக்கு அஞ்சலிகள்...இலட்சங்களில் ஒன்றாக...இதுவும்.

தேசக் குரல் அண்ணன் பாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்காக எழுதியது.

Saturday, April 28, 2007

தமிழீழப் பெருமை

தமிழீழப் பெருமை
மா கடல் வலம் சூழ் கொள வங்கோர்
வரி சங்கொப்ப வோர் நேர் தீவு
சூல் கொண்டிங்குற்று நல் சுயம்பு
கடல் வரி வெட்டி தனி யொத்த
கோல் கொண்டோச்சிய முத்தமிழ் செல்வம்
தட வரியிங்குண்டாம் தனியி
லோர் தழலிங்கு வோர்போதில் பற்றிய கதையாம்
பகருமவர் நவமணிப் பரலீது காணீர்
*************
பால் முலயூற்றிய கையொடு மகவு வாயில்
தமிழ் முலையூட்டிய தாய் வளர்ப்பில்
சீலொடு செம்மையுற சேர் வளம் கொழிக்க
ஏரொடு வேரும் பல் தொழில் சிறந்து
மாலொடும் பிரானும் மனையாட்சி செய்த
மண்ணின் மகிமை கொணர்ந்து
சொற்பாவொடு பாரெங்கும் பரந்து விரி
புகழ்கேளீரிந்த வைடூரியப் பரலீது காண்.
*************
மூவர் வாய் பண்ணிற் கருவாய்
முத்தமிழ் சேர் முடிஹ்ரக் கனியாய்
போவோர் வந்தோர் வணிகக் கரையாய்
போதொடு நெல் சுமந்த மண்ணாய்
வீரர் படையும் விவேகம் கண்ட பண்டிதமும்
நேரொடு நெடுகிய சரிதங்களவைதனை
நீளூரைக்க வோரங்கம் போதிலையென்ன
சோர்விலசொல்ல கோமேதகப்பரலீது தான் காண்!
*************
செங்களனி நாற்று சேற்றில் புதையவெம்
தீற்றிய செம்மண் திட்டியினீராரம்
பரண் நிரப்பிய தங்கம் தகதகத்த நெல்மணி
வங்கம் வரை விரிந்த வயலொடு
பொங்கு தமிழ் மணம் சிறக்கவங்கெலாம்
பொழு தொன்றும் சோர்விலா
செங்கையறு சீரொடு சிறப்பும் சொல
பாங்கினிய பாடும் பவளப் பரலீது காண்
*************
கரை தட்டிய நுரையெலாமங்கு மகரம்
வரை கட்டிய நீரிலுப்பு விளைய
திரையலை கீழாழம் நுகர்ந்து மூச்சடக்கிக்கொணர்
தோராயமாய் குவியல்களில் முத்து
வ்ரிசங்கு வல மிடம் புரியொடு
பரண் நிரப்பிய பவளமொடு செல்வம்
தரை புரண்டோடிய தங்கத் தமிழ் திரு நாடாம்
புகழ் பாடும் முத்துப் பரலீது காண்!
*************
சென்றிரவு இருள் லொரு பொழுது கழியுறு முன்
செம்படவர் வலை சுமந்தேகும்
பாங்கில்வெண்ணிலவு முகில் போர்வையில் முயங்க
பனிதுகளி குளிர்காய்ந்தொழுகு மோர்
அங்கிலக்கில் ஆரவாரமா ஏலேலோக்களொலியில்
செங்கொண்டைச் சேவலும் துயிலெழும்
சங்கதியிங்கு சாங்கியமானதொரு சரிதமென
பாங்கினிலினிய பாடிடும் மாணிக்கப் பரலிது காண்!
*************
மூச்சடைத்து முயங்கி முக்குளித்த மூவாயிரத்தி
லோர் சிப்பியில் முத்தெடுத்தொத்த
சொல்லெடுத்து கோர்த்த கருவுரு கொடுக்க
மையெடுத்துப் போதிலையென்று மருகி
கடல் நீலம் கண்டெடுத்தும் காணான்
களித்திலையெனில் விண்ணேகி தான்
கருமுகில் சாறெடுத்து வந்து சாற்றிய
தமிழீழப் பெருமையாய் வைரத்துப் பரலீது காண்!
*************

Friday, February 23, 2007

  • Better by far you should forget and smile than that you should remember and be sad.
  • All I have seen teaches me to trust the Creator for all I have not seen

Thursday, February 22, 2007

மக்கள்

நாங்கள் வித்தியாசமானவர்கள்
அப்போதும்.........இப்போதுமாய்
இரண்டு நிலை வேறுபாடுகளிலும்.

பேசத் தெரிந்தவர்களாயிருந்தோம்
பேசத் தெரிந்தவர்களிடம்
ஏமாந்திருந்தோம்
ஏமாறத் தெரிந்தவர்களை
ஏமாற்றியிருந்தோம்...
நாங்கள் தமிழர்கள்!

ஒரு காலத்தில்...
எங்களுக்கும் காதல் பருவங்கள்
முக்கியத்துவமாயிருந்தன...
காத்திருத்தலும்...கைவிடப்படலுமாய்....!
அப்போதெல்லாம்.
காதலர்களுக்கு ஓடிப் போகவென்று
நிறைய தேசப் பரப்பிருந்தது...!
அல்லாமல்
காதலுக்காக
தற்கொலை செய்யவென்று
"பொலிடோல்" விற்க
நிறையக் கடைகளுமிருந்தன...!

இன்றும்
நாங்கள் ஓடுகின்றோம்.
விஷங்களை விழுங்குகின்றோம்.
வேறுபட்ட நிலைப்பாடுகளில்
வித்தியாசப் பட்ட பிரஜைகளாய்!

உறைக்கவில்லை ஒரு காலத்தில்
தேசத்தின் சொந்தப் பிரஜைகள்
அடிமைப்படுத்தலுக்குள்
அடங்கிப் போனது!
கனமான இடி முழக்கங்களோடு
புது வகையில் மின்ன்னல் பாய்ச்சி.....
எங்களுக்குள்
உணர்வு மழை பெய்ய
நிறையக் காலங்களெடுத்தது!

Sunday, February 18, 2007

தேசம்

பார்.
தென்றல் வீசிய தேசமொன்றில்
இன்று சூனியம் சும்மா கொட்டிக் கிடக்கிறது!
வேதம் ஓதிய தெருக்களில்
ஒப்பாரி ஓலங்கள் கேட்கிறது..
பாடை கட்டல்
தினசரி காலைக் கடனாகியது...
இன்று
சாவு தாண்டி வீடு வந்தால்
கின்னஸ் சாதனை தானது!

இதோ
என் தேசத்தின் ஒரு பிடி மண்
நுகர்ந்து பார்!
இரசாயனக் கலவை கலந்துழுத
மண்ணில்
இரத்த வாசனை தெரிகிறதா?

அதோ.... அங்கே...
சின்னச் சிசு நிலத்திலறைந்து
பெரிய பெரிய சங்கிலி வாகனம்;
அப்பால்
ஆகாயத்திலிருந்தும் துப்பாக்கி மழை;
நெற்றிக்கு முன் பச்சைத் தொப்பி
குறிவைத்துச் சுட்ட உடல்கள்
உயிர் துப்பி..;
இரத்த ஆற்றில்
இன வெறியின் வேளாண்மை.!

அறுத்தெடுத்த பெண்ணின் முலையில்
பிதுங்கும் இரத்தம்;
கற்பு கனரக ஆயுதத்திற்கு முன்
அற்ப்பமாய்...சும்மா..;
வியாகூலங்களின் விறைப்பில்
எங்கள் உயிர்க் கோட்டில்
குறி வைக்க கோடிச் செலவில்
ஆயுதங்கள்;

சிறையெடுத்து வெறியினமொன்று
எங்கள் சீதைகளைச் சீரழிக்கிறது..!
சீதை கூட
ஒரு தடவை தான்
தீக் குளித்தாள்...
ஆனால்
எங்கள் தேச மாதாவோ
தினசரி தீக்கிரையாகிறாள்!

மேற்படி காலங்களில்
எங்களூரின் மயானங்களில் கூட
பூந்தோட்டங்கள் வைத்திருந்தோம்..
இன்று
எங்கள் பூங்காவனங்கள்
மயானங்களாய்.... சாம்பராகி.....


கீறிய தேசப் பரப்பின் எல்லைக் கோடு
தெளிவாக்கப் படவென்று
பூகம்பங்களோடு.... எரிமலைகளுமாய்
உயிர்கள். குடித்து
துயரமளிக்கும் தேசம்...!

உன்னதமான கலாச்சாரமொன்றைக்
காவு வாங்கிய
சாத்திய கூறுகள் கொண்டு
எங்கள் தேசமிங்கு
நிர்வாணப்படுத்தலில் நிர்மூலமாகியதற்கு
அரை நூற்றாண்டுக் கதையிருக்கிறது...!

கட்டடங்கள் தரை மட்டமாக்கி
இந்த மண்ணில்
சில செத்த வீடுகள் நடத்தி
தேசம் அழித்து விட்டதாய்
ஒரு சாராரின் பகல் கனவொன்று
நடை முரையில் இருப்பதாய்
கேள்வி!

ஆனால்....இங்கு
எத்தனை முறை வேண்டுமெனிலும்
இத் தேசத்தின் சுயம்
கட்டியெழுப்பவென்று
திருப்பணிகள் அமுலில் வைத்த
சமுதாயமொன்று நடத்துகிறது
விழிப்புணர்வில்
ஒரு வேள்வி...!