Sunday, March 01, 2009

ஈழத் தாயின் கேள்வி

என்றெனக்கு ஒரு விடியல் - மகளே
என்றெனக்கு ஒரு விடியல்?
இன்றைக்கு நாளைக்கென எனை - மிக
ஏமாற்றியே காலம் கழித்தாய்.
சண்டைக்குப் போன கரும் புலிகளின்
சாம்பலை அள்ளீக் கொணர்ந்தாய்
கன்றுகளைக் காவு கொடுத்து- என்
கருவறையில் கல்லறைகளாக்கினாய்
இன்றைக்குமது எண்ணம் மாறியதேனோ?- ஏன்
இப்படித் துவண்டு போனாய்?

வீர மரணமென்றெண்ணி -ஒவ்வொரு சாவிலு
மென் வயிற்றுக் கொதிப்படக்கினேன்
போராட்ட வரலாறில் உயிர் போவது
சகஜமென்று துயர் தட்டிக் கழுவினேன்
சாதாரணமாய் சமாதானமாகிவிடுவாயென்றால் - என்
தங்கங்களையா காவு கொடுத்தேன்?
தோராயமா யவர் கொடுப்பதை வாங்கி வர - என்
சுதந்திரமென்ன பிச்சையா எனக்கிங்கு?

இப்படியே..!

சுதந்திரத்திற்கான தவமொன்றில்
இங்கு
மரணித்தல் வரம்;
மண் சுமந்த மேனிகளை
இங்கு
மண் சுமக்கிறது.
நிதானிக்கின்ற நேரங்கள் கூட
எதிரிகளுக்கு அவகாசம்...
ஒரு வகையில்;
இடை வேளைகள் வைக்காமல்
தொடர்கின்ற போராட்டங்கள்
தொடக்கி வைக்கின்ற
முனைப்புகள் நிறைத்து
உணர்வுகள் சுண்டி விட்ட
எலும்புக் கூடுகளில் உயிர்கள் வைத்து,
எழுந்து நிற்கிறது;
எந் நேரமும் ...
எதற்காகவும்..
தயாராகி...வரிசை..
எங்கள் எல்லைகள் நிரப்பி...!

கரும் புலி

உன்
மரண வீட்டில்
இறுதி மரியாதைக்கு
பூத உடல் இல்லை,
அந்திரேட்டிக்கு மட்டும்
அள்ளித் தந்தனர்
உன் சாம்பலை...!

சண்டை போடும் சமரில்
நம்பிக்கையில்லை,
உனக்கு!
சாவை மட்டும் தான்
நம்பிப் போகிறாய்
சமரென்று!

உன் கல்லறையில்
புதைத்து வைக்க
ஒரு எலும்ம்புத் துண்டாவது
கிடைக்குமா?
இரு;
பூவா தலையா
போட்டுப் பார்க்கிறேன்..!

திருப்பள்ளியெழுச்சி!

பொழுது புலர்ந்தது; யான் செய்த பாவத்தால்
துன்பவிருட் கணம் சேர்ந்தன யாவும்.
கொடுந் துயர் தீ யெனப் பரவியெங் கணும்
சூழ்ந்து பரவியது அடிமைத் தளர்;
தொழுதுனை இரஞ்சி யிங்கே வரம் கேட்டிங்கு
தமிழன்னையுன் காலடியில் நிற்கிறேன்
மூடத்துயில் கொள்கின்றனையென் மகவே -சோதித்
திருவிழி திறந்தொரு பள்ளியெழுந்தருளாயே!

புள்ளினம் பறந்தன என் தேசத்தி லாங்கஅன்றொரு
காலம் புரவிகள் மேய்ந்தன புல் வெளிகள்
மெல்லனவே யென் காதுகளில ப்போதியைந்திட
மேள தாளங்களி சைத்தன இணந்தொடு
பன்னெடுங் காலங்களாய் மகனே- ஈங்கந்தப்
பரவசங்க ளெனக்கில்லை துயரன்றி
செல்லடிகளால் செவிடனுமானாயோ நீ,
சிந்தகளின்றி யுன் செயல் திறன் மறந்தனையோ
நன் முத்தே நவ மணியே நன்கு விழித்தெழுவாய்,
உன் நாடு மீளவே யொரு பள்ளியெழுந்தருளாயே

தமிழீழத்தின் அநேகமான பெண்களில் ஒருத்தி..!

நான்
ஐவருக்கு மாலையிடவில்லை;
ஆனாலும்
துகிலுரியப்பட்டேன்.
எங்களூரின்
மஹாயுத்தத்தின் பின்னால்
என்னைப் போல்
நிறையத் திரௌபதைகள்,
சபதங்கள் நிறைவேற்றவென்று
காத்திருக்கிறார்கள்.
ஆனால்
எங்கள் தர்மர்கள்
மீண்டும் ஒரு முறை....
துரியோதனனின் பகடை
மயக்கத்தில்....!
எதிரணியில் ...
துரோணர்களூம் , பீஷ்மர்களும்
அங்கில்லை...
கர்ணனும் , அஸ்வத்தாமனும்
வரவில்லை...
வெறும்
எட்டப்பனும், சகுனிகளும்
தான்
கைகேகியின் கட்டளைகளுடன்...!

(இது எழுதப்பட்ட நாள் மார்கழி 18 2001).

போதுமென்றா துயின்றாய்?

போதுமென்றா துயின்றாய்?
போதுமென்றா துயின்றாய்?
போதுமென்றா துயின்றாய்?- மரணமே
போதுமென்றா துயி்ன்றாய்? (மகனே!)

***************
உன் சாதி சனமிங்கு நாயிலுமீனமாய்
சாவது கண்டு மனந் துவண்டு மரணமே
போதுமென்றா துயின்றாய்? - மகனே!
போதுமென்றா துயினிறாய்?

********
வீதிகளில் தமிழச்சிகள் மானமிங்கு
வீணர்களால் துகிலுரிவதை
பாவியுயிர் தரித்துப் பார்த்திருபேனோ
சீயென்று மனம் கனன்று
கேவியழ ஆண்மை மறுத்து களத்தில்
உயிர் துறத்தல் மிகச் சிறப்பென்று..
நெஞ்சில் தாய் நானிருந்தும் -மகனே
மரணமே போதுமென்றா துயின்றாய்?
********
உயிர் தூசு சுமந்த தேகம் வெற்றில்
மாசு மறுவாய் கனத்ததுவோ?
பயிர் மேய்ந்த வேலி தனைக் கண்டு
கூசி யுள்ளம் உடைந்ததோ?
தளிர் பாலர் பலுரும் போரில் தமை
வீசி உயிர் கொடுத்தும்
போர் வேறு திசை சென்றதில்- மகனே
மரணமே போதுமென்றா துயின்றாய்?

அம்மாவுக்கு..!

அம்மா!
உன் மணிவயிற்றினுள்
தொப்புள் கொடி கட்டி வைத்த
உன் மகன்
இன்றுநாட்டின் தேசியக் கொடிக்காய்
தமிழன்னையின்
மண் வயிற்றில் புகுந்து கொள்கிறேன்.
என் வரவுக்காகவாசல்கள் திறந்து வை!
சமயத்தில்
உன் சேமிப்ப்பிலும்
கொஞ்சம்சேர்த்து வை!
என் சாவு வீட்டுக்கு!!